நியூயார்க்: கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஜோ பைடனுக்கு வழங்கும் விழாவில், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பயங்கர கலவரம் வெடித்தது. ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசி வீடியோக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவிய நிலையில், பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கூறி வீடியோக்கள் அகற்றப்பட்டு, டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ட்விட்டரை தன் வசப்படுத்திய டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், கருத்து சுதந்திரத்திற்கு தான் எப்போதும் ஆதரவளிப்பதாக கூறினார். இதையடுத்து ட்விட்டரில் மீண்டும் டிரம்பின் கணக்கை கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தினார். ஏறத்தாழ 15 மில்லியன் பேர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.