கார்தோம் : சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நிலவும் மோதல் போக்குகள் காரணமாக அங்கு மருத்துவ அவசர நிலை ஏற்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது. சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ராணுவ ஆட்சியை கண்டித்தும் மீண்டும் ஜனநாயக முறையிலான ஆட்சியை ஏற்படுத்தக் கோரியும் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் போராடி வருகின்றன. அந்த வகையில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த கொடூர தாக்குதலில் 185 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி சூடானில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சூடானில் தவிக்கும் இந்திய மக்களை மீட்கும் முயற்சியில் மத்திய வெளியுறவுத் துறை முயற்சித்து வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆபத்துகளில் சிக்கி உள்ள இந்தியர்கள் உதவிக்கு அழைக்க தொலைபேசி எண், இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் 1800 11 8797 என்ற இலவச எண்ணையும் +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905, +91 9968291988 ஆகியோ மொபைல் எண்களையும் அழைக்கலாம் என்றும் அதேநேரம் gov.institution@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.