சான் பிரான்சிஸ்கோ:ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய பின் நேற்று(அக்-27) எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்ற உறுதியளித்த எலான், பொறுப்பேற்றதும் முதல் காரியமாக ட்விட்டர் தலைமை அதிகாரி பாரக் அகர்வால் உட்பட மூன்று அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார்.
முன்னதாக மில்லியனர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, அந்நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வாங்க மறுத்தார்.
இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒப்பந்தப்படி ட்விட்டரை வாங்குமாறு அக்-28 வரை எலான் மஸ்க்கிற்கு காலக்கெடு விதித்தது. இதனையடுத்து நேற்று 44 மில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரின் முதலீட்டாளர் ரோஸ் கெர்பருடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார்.
அதிகாரப்பூர்வமாக ட்விட்டரை கைப்பற்றிய பின் எலான் மூன்று முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார். சில அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் நிதிதுறை தலைவர் நெட் செகல் ஆகியோர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையக அலுவலகத்தில் இருந்து நேற்று வெளியேறினர். மேலும் ட்விட்டரின் சட்டக் கொள்கை, அறக்கட்டளை மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைவர் விஜயா காடேவும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ட்விட்டர் ஆலோசகர் சீன் எட்ஜெட்டும் நீக்கப்பட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கலாமா வேண்டாமா என மஸ்க் வாதிட்டு கொண்டிருந்த போது அவருக்கும், பாரக் அகர்வாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காரணங்களுக்காக தலைவராக பொறுப்பேற்றதும் எலான் மஸ்க், பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2021 இல் ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி பதவி விலகியதை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் அகர்வால் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான் அகர்வால் அதிக காலம் ட்விட்டரில் பணிபுரிந்துள்ளார். மேலும் இவரது பங்களிப்பு ட்விட்டரின் வளர்ச்சியில் இன்றியமையாதது ஆகும். இவர் ட்விட்டரில் இணையும் போது ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ட்விட்டர் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க்...