சான் பிரான்சிஸ்கோ:சர்வதேச அளவில் முக்கிய பிரமுகர்கள் உபயோகிக்கும் முதன்மை சமூக வலைதளமாக ட்விட்டர் திகழ்கிறது. இந்த ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கினார்.
இதனையடுத்து உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் பணிநீக்கம், புது விதமான சந்தா முறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதனிடையே, கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தான் எந்தவொரு நிறுவனத்திற்கும் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கப் போவதில்லை என திலாவவாரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதேநேரம், தான் ட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொண்டு, அதனை நிர்வகிக்கும் நபரை தேட உள்ளதாகவும் கூறினார். மேலும், தான் விரைவில் சிஇஓ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், ஏதேனும் ஒரு முட்டாள் கிடைத்தால், இந்த வேலையை அவரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் எலான் கடந்த டிசம்பரில் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோடிக்கணக்கான ட்விட்டர் பயனர்கள் ட்விட்டரில் எலான் மஸ்க்கால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ட்விட்டர் நிறுவனத்திற்கான சிஇஓவை நியமிக்க உள்ளதாக எலான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ட்விட்டரின் புதிய சிஇஓவை தேர்ந்தெடுத்துள்ளதாக எலான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ட்விட்டரின் புதிய சிஇஓவை தேர்ந்தெடுத்ததன் மூலம் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் 6 வாரங்களில் அவர் பணியைத் தொடங்குவார். தயாரிப்பு, மென்பொருள், மற்றும் சிஸ்டம் ஆப்பரேட்டுகளை மேற்பார்வையிடும் நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓவாக எனது பங்களிப்பு இருக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிவின் மூலம் ஒரு பெண் ட்விட்டரின் சிஇஓவாக பதவி ஏற்க உள்ளார் என்பது தெரிய வருகிறது.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி, அது வரையில் ட்விட்டர் சிஇஓவாக பணியாற்றி வந்த ஜாக் டோர்சி பதவி விலகினார். இதனையடுத்து, மும்பை ஐஐடியில் படித்த இந்திய வம்சாவளியான பராக் அகர்வால் ட்விட்டரின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்விட்டரின் சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
இதையும் படிங்க:ட்விட்டரில் புது வசதி அறிமுகம் - அதிலும் ட்விஸ்ட் கொடுத்த எலான் மஸ்க்!