கொழும்பு :இலங்கை கடற்படையினரால் நேற்று (செப்-11) அதிகாலை மட்டக்களப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற 85 பேரை கைது செய்தனர். இதில் 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் திருகோணமலை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதேவேளை, மொஹத்திவரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 85 நபர்களை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.