ஸ்டாக்ஹோம்:ஆண்டுதோறும் மருத்துவம், இலக்கியம், வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் மகத்தான சேவை புரிந்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பியவின் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பரெட் நோபல் என்பவரின் நினைவாக இந்த நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வரலாற்று ஆசிரியரும், பொருளாதார நிபுணருமான கிளாடியா கோல்டினுக்கு 2023 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இடையேயான வருவாய் வேறுபாடுகள் குறித்த காரணங்களை கண்டறிந்ததற்காக இவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த புரிதல்களை மேம்படுத்தியதற்காகவும், தனது ஆய்வின் மூலம் பெண் தொழிலாளர்களின் சந்தை விளைவுகள் பற்றிய புரிதலை விளக்கியதற்காகவும் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் அக்.2ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இவர் பெற உள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, தங்கப்பதக்கம், சான்றிதழ் உடன் ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.8 கோடி) பரிசுத் தொகையை ஸ்வீடனினின் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இவர் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:literature nobel prize 2023: இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார் நார்வே நாட்டை சேர்ந்த ஜான் ஃபோஸ்!