ராபட் : அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் எல்லையை ஒட்டிய வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவானதாக மொராக்கோ நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.அதேநேரம் 6 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்தாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழங்கால நகரமான மராக்கே மிக அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மராக்கே நகரில் இருந்த பழங்கால ரெட் வால்ஸ் கட்டடங்கள் இடிந்து சேதமானதாக அப்பகுதி மக்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நள்ளிரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பலர் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில், அதிகளவு உயிர் சேதம் நிகழ்ந்து இருக்கக் கூடும் என மொராக்கோ உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்னர்.