அங்காரா: துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள கராமன்மராஸ் நகரில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கமும், நில அதிர்வும் ஏற்பட்டது.
இதனால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 24,617-ஆக அதிகரித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் 2,167 பேர் உட்பட, 3,575 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தியர் சடலம் மீட்பு:இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போன இந்தியாவை சேர்ந்த விஜய் குமார், உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மலட்யா பகுதியில் உள்ள விடுதியின் கட்டட இடிபாடுகளில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.