ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சரவஸ்வதி - ரேவந்த் தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தாய் சரஸ்வதி, குழந்தையை ஜங்கான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தையை ஹதராபாத்தில் உள்ள உயர்ரக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து யாதாத்ரி புவனேஸ்வர் மாவட்டத்தில் இருந்து யாதகிரிகுட்டா மண்டலம் அருகே வாங்கப்பள்ளியின் புறநகரில் போக்குவரத்து போலீசார், குழந்தை அழைத்து செல்லப்பட்ட காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது டிரைவரிடம் ஆயிரம் ரூபாய் வாகன செலான் செலுத்திவிட்டு, மேற்கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். குழந்தையின் தாய் சரஸ்வதி அவசரமாக மருத்துவமனைக்கு செல்கிறோம் அனுமதியுங்கள் என கூறியும், போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பிறகு கார் டிரைவர் ஆயிரம் ரூபாய் செலான் கட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்ல அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அக்குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், இறந்த குழந்தையுடன் தாய் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது. இது குறித்து யாதகிரிகுட்டா போக்குவரத்து சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் கேட்ட போது, அவசர காலங்களில் தாங்கள் வாகன சோதனைகள் மேற்கொள்வதில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில்வே தண்டவாளத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு