வாஷிங்டன்: வருகிற 2024 ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராக சிஎன்என்(CNN) பிரசாரம் செய்யவிருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு நஷ்ட ஈடாக 475 மில்லியன் அமெரிக்க டாலரை டிரம்ப் கேட்டுள்ளார். இதுகுறித்து ஃபெடரல் நீதிமன்றத்தில் சிஎன்என்-ற்கு எதிராக வழக்கு ஒன்றை அவர் தொடர்ந்துள்ளார். தன்னை அரசியலில் தோற்கடிக்க தவறான செய்திகளைப் பார்வையாளர்களுக்கு பரப்புவதாக அந்த வழக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தன்னை ஹிட்லருடன் ஒப்பிட்டும், நிறவெறியர், ரஷ்ய அடிமைபோல் காட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். வருகிற 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் ஜனாதிபதி ஆகிவிட வாய்ப்புள்ள நிலையில், காழ்ப்புணர்ச்சியில் இத்தகைய செயலை இந்நிறுவனம் செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
டொனால்டு டிரம்பைப்பொறுத்தவரை தான் தொழிலதிபராக இருந்த காலகட்டத்திலும் சரி, அரசியல்வாதியாக இருந்த காலகட்டத்திலும் சரி ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதை வாடிக்கையாகவே வைத்து வருகிறார். கடந்த 2020இல் தனது இடைத்தேர்தல் பிரசாரத்தில் 'நியூ யார்க் டைம்ஸ்', 'தி வாஷிங்டன் போஸ்ட்' போன்ற ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.