அட்லாண்டா: அமெரிக்காவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி வகித்தார். அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார், ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்காத டிரம்ப், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்ததாக புகார் எழுந்தது. தேர்தல் முடிவுகளை மாற்றுவது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவரிடம் டிரம்ப் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. இது தொடர்பாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவியதாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்தல் மோசடி தொடர்பான இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் டிரம்ப் மீதான தேர்தல் மோசடி வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய டிரம்ப் உள்ளிட்ட 19 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அதேபோல், ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராகவும் நீதிமன்றம் வாய்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் மோடி வழக்கில் தான் சரணடையப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். கைதாவதற்காக தான் ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவிற்கு செல்லவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, டிரம்ப் நேற்று(ஆகஸ்ட் 24) மாலை அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை பதிவு செய்தனர். அதன் பிறகு சுமார் 20 நிமிடங்கள் டிரம்ப் சிறையில் இருந்தார். இதனால் சிறை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து, 2 லட்சம் அமெரிக்க டாலரை பிணைத் தொகையாக செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொண்டு, டிரம்ப் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.