நியூ யார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், செர்பிய வீரர் ஜோகோவிச் மற்றும் ரஷ்ய வீரர் டெனில் மெத்வதேவ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
நியூயார்க் நகரில் இன்று (செப். 11) அதிகாலையில் நடந்த இறுதிப் போட்டியில், ஜோகோவிச் மற்றும் டெனில் மெத்வதேவ் மல்லுக்கட்டினர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை 6க்கு 3 என்ற கணக்கில் ஜோகோவிச் எளிதில் வென்றார். இதையடுத்து சற்று சுதாரித்துக் கொண்ட டெனில் மெத்வதேவ் அடுத்த செட்-டில் கோகோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இருப்பினும் இரண்டாவது செட்டையும் ஜோகோவிச் 7க்கு 6(5) என்ற கணக்கில் போராடி வென்றார். ஆட்டம் மெல்ல மெல்ல ஜோகோவிச் பக்கம் நகர்ந்து சென்ற நிலையில், அதிரடி காட்டிய ஜோகோவிச் இறுதி செட்டையும் 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார். ஒட்டுமொத்தமாக 1 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில் 6க்கு 3, 7க்கு 6(5), 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வென்று சாமியன் பட்டத்தை கைப்பற்றினார்.