வாஷிங்டன்:அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ஒரு மணி நேரமாக ஆற்றிய உரையானது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைதட்டல்களையும், ஆரவாரங்களையும் பெற்றது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று உரையாற்றியதின் மூலம் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றார். முன்னதாக அவர் 2016ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் முதன் முதலில் உரையாற்றி இருந்தார். மோடி தனது உரையை வழங்க மேடைக்கு ஏறியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.
மேலும், இந்திய - அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர் கேலரியில் இருந்து கைதட்டல்களை எழுப்பி மோடி, மோடி என்று கோஷமிட்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரையின்போது பார்வையாளர்கள் கேலரியில் இருந்த இந்தியர்கள் “மோடி, மோடி” மற்றும் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த கூட்டத்திற்கு வந்திருந்த இந்திய - அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்து இருந்தனர். மோடி தனது உரையின்போது, இந்தியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கானோர் இங்கு உள்ளனர். அவர்களில் சிலர் இந்த அறையில் பெருமையுடன் அமர்ந்திருக்கிறார்கள். எனக்குப் பின்னால் சரித்திரம் படைத்த ஒருவர் இருக்கிறார். அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின, தெற்காசிய பெண்ணான கமலா ஹாரிஸ் பற்றி மோடி அவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், மார்பக புற்றுநோய் விஞ்ஞானியான ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்தார். மோடி இதைக் கூறியபோது, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி சிரித்துக் கொண்டே, உறுப்பினர்கள் ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப் பார்த்து கைதட்டி ஆமோதித்தார். இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
மேலும், மோடி அவரது உரையின்போது “அனைத்திலும், இந்திய அமெரிக்கர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். அவர்கள் ஸ்பெல்லிங் பீயில் (Spelling Bee) மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்கள்” என தெரிவித்தது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் லேசான சிரிப்பை வரவழைத்தது.
ஸ்பெல்லிங் பீ என்பது இந்திய - அமெரிக்க குழந்தைகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்காவின் பிரபலமான போட்டி ஆகும். இந்த ஆண்டும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் புளோரிடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது தேவ் ஷா ஸ்கிரிப்ஸ், நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீண்ட கரவொலியுடன் பிரதமர் மோடி அவரது உரையை முடித்துக் கொண்டார். மோடி அவரது உரையை முடித்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பலர் அங்கு வழங்கப்பட்ட பிரதமர் மோடி ஆற்றிய உரையின் நகலில் அவரது கையொப்பத்தை வாங்கிச் சென்றனர். இந்திய வம்சாவளியினர் “மோடி, மோடி” மற்றும் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்க எடுக்கும் முடிவு எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. அமெரிக்க அதிபர் பைடன்!