கார்தோம் : உள்நாட்டு போரால் ஸ்தம்பித்து காணப்படும் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை இந்திய ராணுவத்தின் இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் மூலம் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி படக் அல் பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத் தலைவராக துணை ராணுவத்தின் தளபதி முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இவர்கள் இருவரிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. துணை ராணுவத்தின் படைப் பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி படக் அல் பர்ஹன் முயற்சி மேற்கொண்டதாகவும் அதற்கு துணை ராணுவம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து துணை ராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன் அதிவிரைவு ஆதரவு படையினர் இணைந்து போர் நடத்தி வருகின்றனர். ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரால் நாட்டில் அமைதியின்மை சூழல் நிலவுகிறது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இரு ராணுவ பிரிவுகளின் அதிரடி சண்டையால் நாட்டில் அமைதியின்மை சூழல் நிலவுகிறது. மேலும் தலைநகர் கார்தோமில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. ஓட்டுமொத்த நாட்டின் இயங்குதன்மை தடைபட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பசியால் தவித்து வருகின்றனர்.