கெய்ரோ(எகிப்து):எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 14) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 55 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அலுவலர்கள் கூறுகையில், அபு செஃபைன் தேவாலயத்தில் அதிக மக்கள் இருந்தனர் எனத் தெரிவித்தனர். மேலும் இந்த தேவாலயம், இம்பா என்ற பகுதிக்கு அருகில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்தில் உண்டான தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிஸ்ஸி, காப்டிக் தேவாலயத்தின் கிறிஸ்தவ போப் இரண்டாம் டவாட்ராஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். போப்பிடம் அவரது இரங்கலைத் தெரிவித்தார் என அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்