கொல்கத்தா:சீனாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகளுக்குச் சீனா விசா வழங்க மறுத்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சீன தூதரகம் பதில் அளித்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், வூஷூ எனும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சீனா விசா வழங்க மறுப்பு தெரிவித்து இருந்தது.
அருணாச்சல வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா, மேபங் லாம்கு ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்திய வீரர்கள் சிலருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டி வருவதாகவும் மேலும், குடியிருப்பு மற்றும் இனத்தின் அடிப்படையில் தனது குடிமக்களை வேறுபடுத்தி நடத்துகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், சீன தூதர் ஜா லியோ பேசுகையில், “இந்தியா-சீனா இடையேயான உறவு நிலையாக உள்ளது. மக்களின் நலன்கள் அடிப்படையில் மட்டுமே இரு நாடு மத்தியில் வலுவான உறவு ஏற்படும். இரு நாட்டின் முன்னேற்றமே வருங்கால உலகிற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளின் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் நிலையான பாதையில் பயணிக்கவும், இரு நாட்டின் தலைவர்களின் கருத்துகளைச் செயல்படுத்தி இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றச் சீனா தயாராக உள்ளது.” எனத் தெரிவித்தார்.