பீஜிங்:சீனாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் நிரம்பி காணப்படுவதாகவும், படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு தினசரி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி தீயாய் பரவின.
மேலும் கரோனா பரவல் விகிதம் அதிகரித்து மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் அதீத மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவின.
ஊரடங்கு அமல்:இதனால் சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கரோனா பாதித்தவர்கள் வீடு உள்ள பகுதிகள் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்துதல் என பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தியது. மேலும் கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு வழங்கியதாக கூறப்பட்டது.
தொடர் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் இழந்து வாழ்வாதாரம் பாதித்த மக்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து வீதிகளில் இறங்கி, அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது சீன அரசு மனிதாபிமானம் அற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
ரகசியம் காத்த சீனா:மேலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை வெளியே கூறாமல் சீனா ரகசிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. பரவலின் உண்மைத் தன்மையை அறியும் வகையில், கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை சீன அரசு வெளியிடக் கோரி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது.