லண்டன்: சீனாவில் கரோனா கட்டுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு பொதுமக்கள் போராடி வரும் நிலையில், அப்போராட்டத்தை படம்பிடிக்க சென்ற பிபிசி செய்தியாளர் எட் லாரன்ஸ் என்பவரை சீன காவல்துறையினர் கைது செய்து அவரை அடித்து துன்புறுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கரோனா தொற்று உருவானது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்திற்கு ஆளாக்கியது. கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து 40 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதனைக் கட்டுபடுத்த சீன அரசு தீவிர கரோனா கட்டுபாடு முறைகளை அமல்படுத்தியுள்ளது, இருப்பினும் அந்நாட்டு பொதுமக்கள் அரசின் இந்த கட்டுபாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து வரும் போராட்டத்தை படம்பிடிக்க சென்ற பிபிசி செய்தியாளர் எட் லாரன்ஸை சீன காவல் துறையினர் அடித்து உதைத்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து பிபிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிபிசி செய்தியாளர் எட் லாரன்ஸ் கைது செய்யப்பட்டதும், காவல்துறையினரால் அடித்து உதைக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காயில் நடந்த போராட்டங்களில் செய்தி சேகரிக்கும் போது கைது செய்யப்பட்ட எங்கள் பத்திரிகையாளர் எட் லாரன்ஸ் நடத்தப்பட்ட விதம் மிகவும் மோசமானது. அவர் விடுதலையாவதற்கு முன்பு பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட போது, அவர் காவல்துறையால் தாக்கப்பட்டார். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளராக பணிபுரியும் போது கூட இது நடந்துள்ளது’ என பிபிசி தெரிவித்துள்ளது.
மேலும் எட் லாரன்ஸ் கரோனா பரவும் கூட்டத்தில் இருந்ததால் அவரது சொந்த நலனுக்காக அவரை கைது செய்ததாக தெரிவித்த சீன அதிகாரிகளின் விளக்கத்தை தவிர, சீன அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ விளக்கமோ மன்னிப்புக்கோ இல்லை.
இந்த விளக்கத்தை நம்பகமான விளக்கமாக நாங்கள் கருதவில்லை’ எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவின் பல நகரங்களில் கோவிட் கட்டுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள் "பதவி விலகுங்கள், ஜி ஜின்பிங்! கம்யூனிஸ்ட் கட்சி விலகுங்கள்" என்று கோஷமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உலக நாடுகளில் எதிரொலிக்குமா?