மனிடோபா (கனடா):கனடாவின் மனிடோபா மாகாணத்தின் கிராமப்புற பகுதியில் நேற்று (ஜூன் 15) பேருந்து மற்றும் கனரக லாரி (semi-trailer truck) மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் கனடா காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம், இந்தப் பேருந்தில் பெரும்பாலும் வயது மூத்தவர்கள் பயணித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பாக மனிடோபா ராயல் கனடா மவுண்டட் காவல் துறையின் கட்டளை அதிகாரி ராப் ஹில் கூறுகையில், “விபத்துக்கு உள்ளான பேருந்தில் 25 பேர் வரை பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
விபத்து நடந்த தகவல் கிடைத்த உடன், மனிடோபா மாகாணத்தில் இருந்து அனைத்து மீட்பு ஆதாரங்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தில் சிக்கி காயம் அடைந்த 10 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கனரக லாரியின் என்ஜின் சேதம் அடைந்து சாலையில் கிடக்கிறது. அதேபோல், விபத்துக்கு உள்ளான பேருந்து கனரக லாரியின் அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் புகை வெளிவந்தபடி காணப்படுகிறது. மேலும், பேருந்து மற்றும் கனரக லாரியின் உடைந்த கண்ணாடித் துண்டுகள், பெரிய அளவிலான பம்பர் ஆகியவையும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.