லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அரசியலில் அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்த கட்டமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அமைச்சரவையில் அடுத்தடுத்து மாற்றங்களை கொண்டு வந்த பிரதமர் ரிஷி சுனக், அமைச்சரவை மறுசீரமைப்பில் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்களை இங்கிலாந்து போலீசார் கையாண்ட விதம் குறித்து விமர்சித்ததாக இங்கிலாந்து உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவெளி சுயெல்லா பிரேவர்மனை, பிரதமர் ரிஷி சுனக் பதவி நீக்கம் செய்தார்.
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சுயெல்லா பிரேவர்மனுக்கு பதிலாக ஜேம்ஸ் கிளர்வலி இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை பதவியில் இருந்து நீக்கியது, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பெரும் தலைவலியாக அமைந்ததாக கூறப்படுகிறது.
சொந்த கட்சிக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாக சொல்லப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவரது கன்சர்வேடிவ் கட்சி எம்.பி ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.