லண்டன்:உலகப்புகழ்பெற்ற கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை, பிரிமியர் லீக் கிளப் விற்கத் தயாராக இருந்தால், அதனை வாங்க ஆர்வம் உள்ளதாக பிரிட்டிஷ் கோடீஸ்வரரான ஜிம் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.
ரசாயன நிறுவனமான Ineos-ஐ வைத்திருக்கும் ராட்க்ளிஃப் ஒரு மான்செஸ்டர் யுனைடெட் ரசிகராக இந்த அணியை வாங்க முயற்சி எடுத்துள்ளார். முன்னதாக, கடந்த மே மாதம் மற்றொரு அணியான செல்சியாவை வாங்குவதற்காக முயற்சி எடுத்தார். ஆனால் அதில் தோல்வியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது அவரது கவனத்தை ரெட் டெவில்ஸ் எனப்படும் மான்செஸ்டர் யுனைடெட் பக்கம் திருப்பியுள்ளார் என PA செய்தி நிறுவனத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. சென்ற 2005ஆம் ஆண்டு முதல் கிளப்பை வைத்திருக்கும் கிளேசர் குடும்பம், கிளப்பில் உள்ள சிறு (Minority) பங்குகளை விற்பது குறித்து ஆலோசித்து வந்தது.
இது குறித்து ப்ளூம்பெர்க்கின் அறிக்கை கூறியதை அடுத்து இந்த செய்தி வெளிவந்தது. ராட்க்ளிஃப் சமீபத்தில் செல்சியா அணியை வாங்க முயன்றபோது, ரோமன் அப்ரமோவிச்சிடம் இருந்து டோட் போஹ்லி வெற்றி பெற்றதால் அவரது சலுகை நிராகரிக்கப்பட்டது.
மேலும் Ineosஇன் செய்தித் தொடர்பாளர், அணியை விற்கும் நோக்கம் நிறுவனத்திற்கு இருந்தால் அதன் சிறிய பங்குகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.