கீவ் :ரஷ்ய- உக்ரைன் இடையிலான போர் 10 மாதங்களை நெருங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின் முதல்முறையாக பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு சென்றார். தலைநகர் கீவ் சென்ற ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்த ரிஷி சுனக், தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ரஷ்யா போர் தொடங்கியது முதலே உக்ரைனுக்கு நெருங்கிய நண்பனாக பிரிட்டன் விளங்குவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவின் வாண்வழி தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி அறிவித்தார். அதன்படி இதுவரை வழங்கி வந்த ராணுவ உதவிகளுடன் சேர்த்து கூடுதலாக 50 மில்லியன் பவுண்டு மதிப்பிலான உதவிகளை வழங்குவதாக ரிஷி சுனக் அறிவித்தார்.
மேலும், ரஷ்யப் படைகளை சமாளிக்க தேவையான பயிற்சிகளை உக்ரைன் வீரர்களுக்கு வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை அதிகரிக்க உள்ளதாக ரிஷி தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய ராணுவத்திற்கு ஈடுகொடுக்க 125 வாண் தாக்குதல் தடுப்பு ஆயுதங்கள், ஈரானின் தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் வழங்க உள்ளதாகவும், மேலும் சிறப்பு உதவியாக நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் உக்ரைனுக்கு ஆயிரம் ஏவுகணை தடுப்பு சாதனங்களை பிரிட்டன் வழங்கி இருந்த நிலையில், கூடுதல் ராணுவ தொகுப்பை பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஈரான் தொழில்நுட்ப ட்ரோன்கள், ராணுவ தளவாடங்களை ரிஷி சுனக் பார்வையிட்டார். மேலும் குளிர்காலம் தொடங்கிய நிலையில் சிதிலமடைந்த புச்சா நகரை சீரமைக்க தேவையான நிதி உதவி, அப்பகுதியில் பாலம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பனியில் தவிக்கும் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக ரிஷி சுனக் கூறியதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :புதுமணப்பெண்ணை தாலி கட்டிய கையோடு "கன்னித்தன்மை பரிசோதனை" செய்ய வற்புறுத்திய மணமகன்