ஜோகன்னஸ்பர்க்:பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. நேற்று(ஆகஸ்ட் 22) தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. கரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொளி வாயிலாக நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு, இந்த முறை நேரடியாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலையில் பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு அங்கிருந்த இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ சில்வா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா விரைவில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும், வரும் காலத்தில் உலக வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா இருக்கும் என்றும் கூறினார். பிரிக்ஸ் நாடுகளின் பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை, தெற்கு பிராந்தியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா, "தென்னாப்பிரிக்காவில் நகரமயமாக்கப்பட்ட மக்கள் சமூகம் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு நிலையான பணியாளர்களை வழங்க முடியும். ஆப்பிரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் வகையில் பிரிக்ஸ் நாடுகள் முதலீடுகள் செய்யலாம்" என்று கூறினார்.