லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து பிரதமராக பதவியேற்றார். அப்போதுதான் , கரோனா பெருந்தொற்றின் முதல் அலை காட்டுத்தீயாக பரவி வந்தது. இதனால், பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்துக் கொண்டிருந்தன.
இந்த நேரத்தில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை மீறி பிறந்தநாள் விருந்தினை நடத்தினார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்பட அரசு அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளி இன்றி கூடினர். இதற்கு, தனது சொந்த கட்சியிலே போரிஸ் ஜான்சன் எதிர்ப்பை சம்பாதித்தார்.
இதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு, ஜூன் 2020இல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
மேலும், எதிர்க்கட்சிகளும் அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் "பார்ட்டிகேட்" ஊழல் தொடர்பாக போரிஸ் ஜான்சனை ராஜினாமா செய்யக் கோரினர். இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டத்தின்போது, போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டது.