லண்டன்: இலக்கிய உலகில் முக்கிய அங்கீகாரமாக "புக்கர் பரிசு" கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சிறந்த நாவலுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு, இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகாவுக்கு வழங்கப்பட்டது. இலங்கை உள்நாட்டு போர் தொடர்பாக அவர் எழுதிய "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா (The Seven Moons of Maali Almeida)" என்ற நாவலுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டது.
புக்கர் பரிசுத் தேர்வில் இறுதிப்போட்டியில் இடம்பெற்ற 6 நாவல்களில், கருணாதிலகாவின் நாவலை நடுவர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து பிரிட்டனில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விழாவில், ஷெஹான் கருணாதிலகா புக்கர் பரிசை பெற்று கொண்டார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி கமிலா, அவருக்கு புக்கர் பரிசை வழங்கினார். 58,000 டாலர் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
ஷெஹான், 'தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா' நாவலை இலங்கை உள்நாட்டு போரை அடிப்படையாக கொண்டு எழுதினார். புகைப்பட கலைஞரான மாலி அல்மெடா என்பவர், இறந்த பிறகு தன்னை கொன்றவர்களை கண்டுபிடிக்க மீண்டும் உயிர் பிழைப்பதும், உள்நாட்டு போரின் கொடூரம் தொடர்பாக மறைக்கப்பட்ட விஷயங்களை புகைப்படங்கள் மூலம் வெளியே கொண்டு வரும் வகையிலும் இந்த நாவலை எழுதியுள்ளார். உள்நாட்டு போரில் இறந்தவர்கள் சிக்கலான நிகழ்காலத்துடன் பேசக்கூடும் என அவர் நம்பினார்.
இதுதொடர்பாக கருணாதிலகா கூறுகையில் "உள்நாட்டுப் போர் முடிந்தவுடன், எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? இவை யாருடைய தவறு? என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த விவாதத்தால் எங்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அந்த விவாதங்களில் போதிய உண்மையோ, நல்லிணக்கமோ இருப்பதாக நான் உணரவில்லை.
அதனால், நான் ஒன்றை யோசித்தேன். இறந்துபோனவர்களின் அமைதியான குரல்களை பேச அனுமதித்தால் என்ன? அவர்கள் பேசுவது போல ஒரு பேய் கதையை எழுதினால் என்ன? என்று நினைத்தேன். அதேநேரம் நாவல்கள் எழுதுவது ஒரு ஆபத்தான வேலை என்று தோன்றியது. நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதில் அது தெரிகிறதல்லவா?