ஐதராபாத் :இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் அட்டத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆட்டம் நடைபெற்ற ஐதராபாத் மைதானத்தின் தரைதள பணியாளர்களுக்கு பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை கேப்டன் பாபர் அசாம் வழங்கினார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
இதில் நேற்று (அக். 10) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரமா 108 ரன்களும் விளாசித் தள்ளினர். தொடர்ந்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறம் விளாசித் தள்ளினார். அவருக்கு உறுதுணையாக விக்கெட் கீப்பர் முகமாது ரிஸ்வான் அதிரடி காட்டினார்.
இருவரும் கூட்டணி அமைத்து இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 48 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆட்டத்தில் 4 சதங்கள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 7ஆம், தேதி டெல்லியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான ஆட்டத்தில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டு இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் குயின்டன் டீ காக் (108 ரன்), வேன் டர் துசன் (108 ரன்), எய்டன் மார்க்ராம் (106 ரன்) ஆகியோர் சதம் விளாசினர்.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட்டாகாமல் 131 ரன்கள் குவித்து இருந்தார். ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் கம்ரால் அக்மல் 124 ரன்கள் குவித்ததே ஒரு உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அந்த சாதனையை முகமது ரிஸ்வான் முறியடித்து உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தோடு ஐதராபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. இதையடுத்து ஆட்டம் நிறைவு பெற்றதும் ஐதராபாத் மைதானத்தின் தரைதள பணியாளர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த குழு புகைப்படத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வீரர்கள், ஐதராபாத் மைதானத்தின் தரைதள பணியாளர்களுக்கு பாகிஸ்தன் அணியின் ஜெர்சியை பரிசளித்தனர். நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு ஆட்டங்களில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி வாகை சூடி உள்ளது.
கடந்த 6ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே ஐதராபாத் மைதானத்தில் நேற்று (அக். 10) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கண்டு உள்ள பாகிஸ்தான் அணி வரும் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் வென்றதாக வரலாறு கிடையாது. இதற்கு முன்னர் நடைபெற்ற 8 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்" - சாதனை மங்கை வித்யா ராம்ராஜ்!