பெஷாவர்:பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் (Pakistan blast) 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெஷாவர் நகரில் உள்ள பிரபல மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதிய தொழுகை நேரத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாகவும், தற்கொலைப் படை தாக்குதல் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உணவுப் பஞ்சம், மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, எரிவாயு பஞ்சம், பொருளாதாரம் சரிவு எனப் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு தற்போது கூடுதல் தலைவலியாக வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆப்கானிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை காரணமாக முட்டல் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அண்டை நகரமான பெஷாவரில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
மசூதியின் பெரிய சுவர் இடிந்து விழுந்த நிலையில், அதற்கடியில் பலர் சிக்கியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 32 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 150 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின்போது சம்பவ இடத்தில் 260-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.