வாஷிங்டன்: கைதிகள் பரிமாற்றம் முறையில் அமெரிக்கக் கூடைப் பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை ரஷ்யா விடுதலை செய்ததை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பாராட்டி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா சென்ற அமெரிக்கக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் போதைப் பொருள் கடத்தியதாக ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ரஷ்யா உத்தரவிட்டது. இச்சம்பவம் உலகளவில் பெரிய பிரச்சினையைக் கிளப்பிய நிலையில், ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாகப் பொருளாதாரத் தடைகளை விதித்ததால், கூடைப்பந்து வீராங்கனையைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ரஷ்யா பழி தீர்ப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் பிரச்சினையை முறையிடப் போவதாக அமெரிக்க தெரிவித்தது. இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் மூலம் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் விடுவிக்கப்பட்டு உள்ளார். கைதிகள் பரிமாற்றத்தில் ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் பவுட் என்பவரை விடுவித்து பிரிட்னி கிரைனரை அமெரிக்கா மீட்டுள்ளது.