பெய்ஜிங் (சீனா): மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாள் சுற்றுப்பயணமாகச் சீனா சென்றுள்ளார். தனது மனைவி சாஜிதா முகமது மற்றும் மாலத்தீவு நாட்டு உயர் அதிகாரிகளுடன் சென்றுள்ளார். அங்கு இவரது சுற்றுப்பயணத்தின் போது, சீன அதிபர் சை-ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். மேலும், இருவரின் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதத்தில் சில ஒப்பந்தங்களில் கையொப்பம் இட உள்ளனர்.
மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவு செய்ததையடுத்து, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாலத்தீவு அதிபர் முதல் முறையாகச் சீன சுற்றுப்பயணம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்மையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி இருந்தார். அப்போது, "இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பின் மூலம் சீனா - மாலத்தீவு இடையே ஒரு வரலாற்றுத் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட்டு புதிய உச்சத்தை அடைவதற்கான வழிகாட்டல்களை, இரு நாட்டுத் தலைவர்களும் வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாலத்தீவு அதிபரின் சீன சுற்றுப்பயணம் குறித்து அந்நாட்டு அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், இரு நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் மற்ற துறைகளில் மேம்பாடுகளுக்கு இந்த பயணம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும், தென்கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜோவில் (Fuzhou) நடைபெறும் இன்வெஸ்ட் மாலத்தீவு மன்றத்திலும் (Invest Maldives Forum) மாலத்தீவு அதிபர் முய்சு கலந்து கொண்டு, இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு குறித்து, அந்நாட்டுத் தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாட உள்ளார்.