டெல்லி : அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி விமரிசையாக திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த உத்தர பிரதேசம் மாநிலமே விழாக் கோலம் பூண்டு உள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை விளம்பரப்படுத்தும் பொறுப்பை அரசு மட்டுமின்றி பல்வேறு இந்து அமைப்புகளும் கையில் எடுத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்த ராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், இல்லினாய்ஸ், நியூ யார்க், நியூ ஜெர்சி, ஜார்ஜியா, அரிசோனா, மிசோரி உள்ளிட்ட 10 மாகாணங்களில் 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் அமெரிக்க கிளை இந்த விளம்பர பில் போர்டுகளை வைத்து உள்ளன. மேலும், நியூ ஜெர்சி உள்ளிட்ட இடங்களில் கார் பேரணி, பொருட்காட்சி, ராட்சத விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவைகள் மூலம் இந்துகள் ராமர் கோயில் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.