தான்சானியா:மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக தான்சானியா நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று(ஜூலை 5) சான்சிபார் சென்றடைந்த ஜெய்சங்கருக்கு, தான்சானியா அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவினியை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா உடனான நல்லுறவை மேம்படுத்துவதில் சான்சிபாரின் பங்களிப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டினார். மேலும், பாதுகாப்பு, கல்வி உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, சான்சிபாரில் சென்னை ஐஐடியின் கிளையைத் தொடங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவினி மற்றும் சான்சிபார் அமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சான்சிபார் சென்னை ஐஐடி வளாகம், இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஐடி வளாகம் 50 இளங்கலை இடங்கள் மற்றும் 20 முதுகலை இடங்களுடன், வரும் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தான்சானியாவில் உள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான திரிசூலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.