டோக்கியோ :நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ஐப்பானை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐப்பானின், டோக்கியோவைச் சேர்ந்த நிறுவனம் ஐஸ்பேஸ். நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஐஸ்பேஸ் நிறுவனம் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டது. அதற்காக Hakuto-R Mission 1 என்ற திட்டத்தை உருவாக்கிய நிறுவனம், பிரத்யேக விண்கலத்தை உருவாக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை எட்டிய விண்கலம், நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் நேற்று (ஏப் 25) இரவு 10 மணி அளவில் விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் இறக்க அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இதற்கான நேரலை ஐஸ்பேஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
நிலவில் முதல் வணிக விண்கலம் தரையிறங்க இருந்த வரலாற்று நிகழ்வை, அந்நிறுவனம் மட்டும் ஜப்பான் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தீடீரென விண்கலத்தை தொடர்ப்பு துண்டிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் விண்கலத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 6 மணி நேரம் விண்கலத்துடனான தொடர்பை கொண்டு வர விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர். தொடர்ந்து விண்கல கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பப்பட்ட நிலையில், விண்கலம் நிலவில் மோதியதற்கான உயர் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.