பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வா பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பன்னு மாவட்டத்தில் உள்ள ஜானி கேல் பகுதியில் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. அந்த தாக்குதலில் நைப் சுபேதார் சனோபர் அலி உள்பட சுமார் 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 ராணுவ வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து ISPR வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை தாக்குதல் படையைச் சேர்ந்த ஒருவர் திட்டமிட்டு, ராணுவ வாகனத்தின் மீது மோதி தன்னைத் தானே வெடிக்க வைத்துள்ளார். இதனால் தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இது சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து, "பலரைக் காயப்படுத்திய கோழைத்தனமான பயங்கரவாத செயல்" என கக்கர் தனது கண்டனங்களையும் சமூக வலைதளமான 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இது போன்ற தீவிரவாத செயல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாகக் கடந்த நவம்பரில் பாகிஸ்தானின் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) அரசாங்கத்துடனான போர் முடிவடைந்ததிலிருந்தே, பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துக் காணப்படுவதாக டான் (Dawn) ஆங்கில செய்தித்தாள் ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதே போலக் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று வஜிரிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவின் மூலம் தகவல்கள் வெளியானது. மேலும் பலுசிஸ்தான் பகுதிகளான ஜோப் மற்றும் சுய் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ராணுவ ஆபரேஷனில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுவே ஒரே நாளில் பாகிஸ்தான் ராணுவம் கண்ட அதிக உயிரிழப்பு ஆகும்.
அதற்கு முன், பலுசிஸ்தானின் கெச் என்ற பகுதியில் கடந்த 2022 பிப்ரவரி மாதம் நடந்த தீ தாக்குதலில் சுமார் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை PICSS என்ற பாகிஸ்தான் கல்வி நிறுவனம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், இந்த ஆண்டின் பாதியில் மட்டும் பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் உள்ளிட்டவற்றால் சுமார் 389 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:வேலூரியில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!