ஹொனலுலு: ஹவாய் நாட்டின் ஹொனலுலுவில் இருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 163 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என 175 பேருடன் புறப்பட்ட ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம், "புறப்பட்ட ஏறக்குறைய ஐந்து மணி நேரத்திற்குள் எதிர்பாராத கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டது" இந்த சம்பவத்தில் 7 பேர் காயம் அடைந்ததாக, விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பயணி சுல்தான் பாஸ்கோனியாலி கூறியதாவது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அசாதாரண சூழல் ஏற்பட்டு, விமானம் குலுங்கத் துவங்கியது. ஒரு மனிதன் மேல்நோக்கிச் செல்வதையும், அவன் தலையை கூரையில் இடித்ததையும், மீண்டும் கீழே இறங்குவதையும் அவர் விவரித்தார். விமானம் சிட்னியில் தரையிறங்கியபோது காயமடைந்த மூன்று பயணிகளை, விமான நிலைய மருத்துவர்கள் மதிப்பீடு செய்து அவர்களுக்கு உகந்த சிகிச்சை வழங்கப்பட்டதாக, விமான நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
ஒரு பயணி மற்றும் மூன்று விமான பணிப்பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை முடிந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஜூலை 03ஆம் தேதி, விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது. "விமானத்தில் இருந்த எனது இரு குழந்தைகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும், விமான நிறுவனத்திடமிருந்து நான் எதுவும் கேட்கவில்லை" என்று மற்றொரு பயணியான தாரா குடால் தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார்.
"இந்த கொந்தளிப்பு நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களைத் தொடர்ந்து கவனிப்பதே எங்கள் உடனடி முன்னுரிமையாகும், மேலும் சிட்னி விமான நிலையத்தில், விரைந்து செயல்பட்டு, முதலுதவி மேற்கொண்டவர்களுக்கு, நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.