டெல்லி:எகிப்து முன்னெடுத்த இரு தரப்பு நிபந்தனையற்ற போர் நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல், பாலஸ்தீனம் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், கடந்த பத்து நாட்களுக்கம் மேலாக நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த பத்து நாள் மோதலில், 217 பாலஸ்தீனியர்களும், 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
"11 நாட்கள் கொடிய விரோதத்திற்குப் பிறகு பாலஸ்தீனத்தின் காஸாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை வரவேற்கிறேன்" என ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரோஸ் நேற்று தெரிவித்துள்ளார்.
காஸாவின் புனரமைப்பு முயற்சிகள், காஸா மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகளை ஐ.நா., சர்வதேச தரப்புகளுடன் இணைந்து வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால், அவர் காஸாவை நிர்வகிக்கக்கூடிய ஹமாஸுடன் இணைந்து இந்த உதவிகளைச் செய்யாமல், சர்வதேசத் தரப்பு ஏற்றுக்கொண்ட பாலஸ்தீனிய ஆணையத்துடன் இணைந்து செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.