கொரோனாவின் தாக்கம் சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா, ஐரோப்பிய நாடுகளிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் இதுவரை 66 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,501 பேருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், ஈரானின் துணை அதிபர் மசோமே எப்டேகர், சுகாதாரத் துறை இணை அமைச்சர் இராஜ் ஹரிர்சி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்நாட்டின் அரசுத் துறை வட்டாரங்களுக்கு அதிர்ச்சியை கிளப்பியது.
தற்போது அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு (Ayatollah Ali Khamenei) நெருக்கமான தலைவரான முகமது மிர்மொகமதி கொரோனா பாதிப்பால் உயிரிழ்ந்துள்ளார். நாட்டின் மிக உயர்மட்டத் தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது அங்கு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இதையடுத்து போர் கால நடவடிக்கையாக கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராகும் என அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் பாதிப்பிற்குள்ளான நபர்களுக்கு உதவும் பொருட்டு ராணுவ வீரர்களை பணி அமர்த்தவும் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நீங்கள் உண்மை தானா? 'இரட்டை உடல்' வதந்திக்கு புதின் விளக்கம்