சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பம் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. குறிப்பாக சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கல் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு, ஈரான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை அந்நாடு விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா தற்போது வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பேசுகையில், "கோவிட்-19 ஈரான் சிறைகளில் பரவி வருவதாக வெளியாகும் தகவல் கவலையளிப்பதாகவே உள்ளது. எனவே, ஈரானிய அரசு அந்நாட்டு சிறைகளில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வைரஸ் பரவும் சூழலில் அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது நாகரிகமற்றது. ஈரானில் (கோவிட் காரணமாக) அமெரிக்கர்கள் யாரேனும் உயிரிழந்தால், அதற்கு அந்நாடு தான் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்" என்றார்.