சவுதி அரசின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு முக்கிய எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சவுதி அரசு அதனுடைய கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50 சதவீதத்தை (அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் பீப்பாய்) குறைத்துள்ளது. இதன் எதிரொலியாக உலகளவில் எண்ணெய் விலை மூன்று சதாப்தங்களில் இல்லாத அளவிற்குப் பன்மடங்கு உயர்ச்சி கண்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ குற்றம்சாட்டியிருந்தனர்.