யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நூறாண்டுகளாக தீராத பகை உள்ளது. இருநாடுகளும் 1967ஆம் ஆண்டு மோதிக்கொண்டன. ஆறே நாட்கள் நடந்த இப்போரில் ஆதிக்கம் செலுத்திய இஸ்ரேல், ஜெருசலேத்தைக் கைப்பற்றியது. அதாவது போருக்கு பின்னர் ஜெருசலேம் முழுவதுமாக இஸ்ரேல் வசம் சென்றது. இதையடுத்து இருநாடுகளும் அடிக்கடி மோதிக்கொண்டன. இஸ்ரேல் தனது ராணுவப் படையை ஜெருசலேத்தில் நிறுத்தியுள்ளது.
ஆகையால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து உலக நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. இதற்காக அமைதி ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டன. 1967ஆம் ஆண்டு போருக்கு முன்னர் தங்கள் கைவசம் இருந்த பகுதிகள் மீண்டும் பாலஸ்தீனத்துக்கு வழங்க வேண்டும் என அந்நாடு வலியுறுத்துகிறது. இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துவிட்டது. “இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்ரேல் என்ற நாடு உள்ளது. வரலாற்றில் கானான் என்று அழைக்கப்பட்டது, ஜெருசலேம் எங்களின் புனித நகரம்” என்று இஸ்ரேல் கூறுகிறது.
எனினும் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை எந்த வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவின் தூதரகம் இஸ்ரேலில் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு பாலஸ்தீனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் விதமாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டுவருகிறார். இந்த ஒப்பந்தம் நூற்றாண்டின் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.