ஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு எல்லையோர மாகாணம் நங்கர்ஹார். இந்த மாகாணத்தின் கொக்யானி மாவட்டத்தில் உள்ள வஸிர் டங்கி என்னும் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசுப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை நள்ளிரவு ஐ.எஸ்.ஐ.எஸ். முகாம்களைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் அரசுப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, தவறுதலாக அருகிலிருந்த ஒரு விவசாய நிலத்தின் மீதும் தாக்குதலானது நடந்தேறியது. இதில், அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து நங்கர்ஹார் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் அத்தோவ்லா கொக்யானி (Attauallah Khogyani) கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நிகழ்விடத்திலிருந்து இதுவரை ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.
ஸாபுலில் தலிபான்கள் வெறியாட்டம்
இதனிடையே, ஆப்கானிஸ்தானின் தென்-கிழக்கு எல்லையோர மாகாணமான ஸாபுலில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தை குறிவைத்து வெடிகுண்டு பொருத்திய டிரக்கை தலிபான்கள் நேற்று வெடிக்கச்செய்தனர். ஆனால், இயக்குநரகத்துக்கு அருகே இருந்த ஒரு மருத்துவமனை இந்தத் தாக்குதலுக்கு இரையானது.
ஸாபுல்: வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த ஆம்புலன்ஸ்கள் இந்தக் கொலைவெறித் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
ஒரேநாளில் அரசுப் படையினர், தலிபான்கள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் 50 அப்பாவி பொதுமக்கள் பலியான சம்பவம் அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் 18 ஆண்டுகால உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க-தலிபான்கள் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென கடந்த வாரம் கைவிடப்பட்ட நிலையில், தலிபான்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் வாக்களிக்கச் செல்வதை தடுக்கும் முயற்சியில் தலிபான்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.