உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில், ஏற்கெனவே போர் மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் குழந்தைகளின் நிலைமை பேராபத்தில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் கூடுதலாக 99.4 மில்லியன் டாலரை (சுமார் 700 கோடி ரூபாய்) நிவாரண நிதி வழங்குமாறு யுனிசெப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிதியத்தின் மத்திய கிழக்குப் பிராந்தியத் தலைவர் டெட் சார்பான் கூறுகையில், "ஏமனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் உள்ள 50 விழுக்காடு சுகாதார மையங்கள் செயல்பாட்டில் இல்லை. 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர். இதில் நான்கு லட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு உதவி செல்லவில்லை என்றால், 50 விழுக்காடு குழந்தைகள் இறக்க நேரிடும். இதுபோன்ற இக்கட்டான சூழலில், கோவிட்-19 நோய்ப் பரவல் அபாயம் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும்" என்றார்.