ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்ளாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து தாலிபானும், அமெரிக்கத் தூதர்களும் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த ஆறு நாட்களாக இரதப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஜால்மே கலில்ஜாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
பயங்கரவாதம் கைவிடுதல், அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப்பெறுதல், உள்நாட்டு பேச்சுவார்த்தைகளில் இடம் பெறுதல், நிரந்தர போர் நிறுத்தம் ஆகிய அனைத்து அமைதி ஒப்பந்த அம்சங்களிலும் நாங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட படம் கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்ற பிறகு தாலிபானுடனான பேச்சுவார்த்தை புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்த பேச்சுவார்த்தையை தாலிபான்கள் புறக்கணித்தனர். ஆப்கானிஸ்தான் அலுவலர்கள் அதில் கலந்துகொள்ள இருந்ததே அதற்கு காரணம்.
ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பல்வேறு முறை தாலிபானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவற்றை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.