மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம், துருக்கியின் ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாகப் போர்மேகம் சூழ்ந்துள்ள சிரியாவில் குர்து இன மக்களின் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது.
சிரிய எல்லைப்பகுதியில் உள்ள குர்து இன ராணுவ அமைப்பான எஸ்.டி.எஃப் மீது துருக்கி அரசு தாக்குதல் நடத்திவரும் நிலையில், எஸ்.டி.எஃப்க்கு பாதுகாப்பாக சிரிய அரசின் ராணுவம் களமிறங்கியுள்ளது. சிரிய அரசும், குர்து போராளிகளும் எதிரெதிர் துருவங்களாக இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அணிமாற்றம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அத்துடன், ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ரஷ்ய அதிபர் புதின் துருக்கியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் சிரிய பிரச்னையின் பின்னணி:
கடந்த 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் சிரியாவை கைப்பற்றியது. சிரியாவில் வசித்துவரும் மற்ற இன மக்கள் குறிப்பாகப் பூர்வ குடிகளான குர்து இன மக்களின் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்திவந்தது.
இந்நிலையில், சிரியாவில் பயங்கரவாதத்தை ஒழித்து குர்து இன மக்களைப் பாதுகாக்கும்விதமாக அமெரிக்கா தனது ராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பியது. 2014ஆம் ஆண்டு முதல் குர்து இன போராளிகளுடன் கைகோர்த்து அமெரிக்க ராணுவம் தீவிர போரை நடத்தியது. இதன் விளைவாக, ஐஎஸ்ஐஎஸ் சிரியாவில் ஒடுக்கப்பட்டது.
அதேவேளை, மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தலைதூக்காத வண்ணம் அமெரிக்க ராணுவம் சிரியாவில் பாதுகாப்புப் பணி மேற்கொண்டுவந்தது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டொனால்டு ட்ரம்ப், வெளிநாட்டில் பணியாற்றிவரும் அமெரிக்க ராணுவத்தினரை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவேன் என்பதைத் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். அதிபராகப் பதவியேற்றவுடன் அதை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறார் ட்ரம்ப். ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளை திரும்பி கொண்டுவரத் தாலிபான் அமைப்புடனும், ஆப்கான் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பித்தது குறித்து ட்ரம்பின் கவலை அதேபோல், சிரியாவில் இருக்கும் தனது படைகளை நாடு திரும்புமாறு அதிரடி உத்தரவைக் கடந்தவாரம் பிறப்பித்தார் ட்ரம்ப். இதன் தொடர்ச்சியாக சிரியாவின் அண்டை நாடான துருக்கி, சிரியாவில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக அமெரிக்க அரசு பாதுகாப்பு அளித்துவந்த குர்து இனமக்களின் மீது துருக்கி குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருகிறது. துருக்கி ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்கப் பிடியிலிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுமார் ஆயிரம் பேர் தப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குர்து பெண் போராளிகள் ட்ரம்பின் எதிர்பாராத நடவடிக்கையானது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குர்து இனமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமெரிக்கா அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். போர் தீவிரத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக அமைதி நிலவிவந்த சிரியாவில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒரு நடவடிக்கையின் காரணமாகப் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.