சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்திருந்த பிரத்யேகப் பேட்டியில், "சவுதி எண்ணெய் ஆலை, வயல் மீது ஈரான் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் போருக்கு சமமானது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ கூறியிருந்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.
உலகிற்குத் தேவையான 30 சதவீத எரிசத்தி, உலகின் மொத்த உற்பத்தியில் 4 சதவீதம், மற்றும் 20 சதவீத வர்த்தக வழித்தடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது வளைகுடா பிராந்தியம். ஈரானுடன் நாங்கள் போரில் ஈடுபட்டால் இவை அனைத்தும் திடீர் நிறுத்தத்திற்கு வரும். கச்சா எண்ணெய் விலை நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு ஏற்றத்தைக் காணும். உலகப் பொருளாதாரமே நிலை குலைந்து போகும்.
ஆகவே, ஈரானை தடுத்து நிறுத்த உலக நாடுகள் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய இளவரசர் சல்மான்," அமைதியான பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் பிரச்னையை தீர்த்துக்கொள்ள நினைக்கிறோம். ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசி புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை எட்டவேண்டும்" என வலியுறுத்தினார்.