உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகள் திணறுகின்றன. தற்போது தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்த் தொடங்கியுள்ளது.
உலகளவில் 8 கோடி பேர் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியைத் தாண்டியுள்ளது.
நாட்டில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டுவருகின்றன.
சவுதி பட்டத்து இளவரசருக்குத் தடுப்பூசி
கரோனா பரவலில் சவுதி அரேபியா உலகளவில் 35ஆவது இடத்தில் இருக்கிறது. சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்குத் தொற்று உறுதியானது. அங்கு கரோனாவால் தற்போதுவரை மூன்கு லட்சத்து 61 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆறாயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கரோனா தடுப்புக்கான மருந்தின் முதல் டோஸை பெற்றுக்கொண்டார். மேலும், நாட்டில் குடிமக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கிவரும் சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியாவிற்கு பட்டத்து இளவரசர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தடுப்பூசி பெற்றுக் கொண்டார். உலக அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவார். இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவின் வருங்கால அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.