சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் கட்டுரையாளராகப் பணியாற்றிவந்தார். சவுதி அரேபிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் கட்டுரைகள் எழுதிவந்ததால், அந்நாட்டு அரசு கடும்கோபத்தில் இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து அமெரிக்காவிற்கு குடிபுகுந்தார் கஷோகி.
பத்திரிகையாளர் கஷோகி துருக்கியைச் சேர்ந்த ஹதிசே சேங்கஸ் என்ற பெண்ணை காதலித்துவந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த கஷோகி, திருமணத்துக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் சென்றார். உள்ளே சென்றவர் மாயமாகவே, அம்மர்மம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
இந்நிலையில், கஷோகி தூதரகத்திற்குள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு அறிவித்தது. மேலும் இந்தக் கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டியது. அதற்கான ஆவணங்களைத் திரட்டி விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.