பாக்தாத்திற்கு வடக்கே உள்ள ஈராக் விமானத் தளத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ஈராக் ராணுவம் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில், "அல்-பாலாத் விமான தளத்தை எட்டு ராக்கெட்டுகள் தாக்கின. இந்தத் தாக்குதலில் இரண்டு ஈராக் அலுவலர்கள் மற்றும் இரண்டு விமானபடை வீரர்கள் காயமடைந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஈராக்கின் எஃப் -16 விமானங்களுக்கான முக்கிய விமானத் தளம் அல்-பாலாட் ஆகும். ஈராக்கின் விமானப்படையின் பலத்தை அதிகரிக்க இந்த எஃப் 16 வகை போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து ஈராக் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தளத்தில் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர்களும் ஒப்பந்தக்காரர்களும் இருந்தனர். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே அதிகரித்துள்ள பதற்றத்தால் பெரும்பகுதியான ராணுவ வீரரகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.