மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (செப்.05) மாலை அப்படியே ஈரான் சென்றடைந்தார்.
அங்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமியுடன் இந்தியா - ஈரான் பிராந்திய பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து ராஜ்நாத் சிங் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். ரஷ்யா, சீனா, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தெஹ்ரானில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்தித்த அவர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள், இருதரப்பு ஒத்துழைப்புப் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
மேலும், இருவரும் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பிராந்தியப் பாதுகாப்புப் பிரச்னைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.