டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கரோனா தடுப்பூசியை முதல் நபராக பெறத் தயாராகியுள்ளார்.
முன்னுதாரணமாக நெதன்யாகு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தனிமைப்படுத்தல் காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்தநாள் (சனிக்கிழமை) கரோனா தடுப்பூசியை முதல் நபராக ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளேன்.
இதன்மூலம் மக்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ ஆசைப்படுகிறேன். வரும் ஜனவரி மாத இறுதிக்குள் மில்லியன் கணக்கான டோஸ் இஸ்ரேலியர்களுக்குத் தயாராக இருக்கும். தடுப்பூசி போடுவதில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்.
முதற்கட்டமாக தடுப்பூசி கரோனா களப்பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் அளிக்கப்படும். பின்னர், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும்" என்றார்.
8 மில்லியன் டோஸ்
கடந்த வாரம், அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் தயாரித்த கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் இஸ்ரேலுக்கு வந்தடைந்தது.
தற்போதுவரை, இஸ்ரேலிய அரசு 8 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.