கடந்த மாதம் டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் இரு நாட்டில் வசிக்கும் குடியுரிமை பெற்றவர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் 2 நாடுகளுக்கும் சென்று வரலாம்.
இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரமான டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து துபாய்-அபுதாபி இடையே பயணிகள் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பென் குரியன் விமான நிலையத்திற்கு முதன்முதலாக துபாயிலிருந்து வந்த பயணிகள் விமானத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டு துபாய் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், விமான போக்குவரத்து நிறுவனமான ஃப்ளை துபாய், தினந்தோறும் இரண்டு விமானங்கள் இஸ்ரேல்-துபாய் இடையே இயக்கிட திட்டமிட்டுவருவதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.